Saturday, March 24, 2012

THAMILZ KUURUM NALLULAGAM

தமிழ்கூறும் நல்லுலகம் பற்றி அகத்தியர் குழுவில் எழுதிய மடல்

அன்பர்களே,


தமிழ்கூறும் நல்லுலகம் போன்ற தலைப்புக்களில் பண்டைக்கால தமிழ்நாட்டின் பரப்பளவு, எல்லைகள் முதலியவற்றை அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன்.
இவற்றையெல்லாம் வைத்து சங்ககாலம், இடைக்காலம், பல்லவ-பாண்டியர் காலம், சோழர் கால, பாண்டியர் காலம், துருக்கர் ஆட்சிக்காலம், விஜயநகர ஆட்சி - மண்டலங்கள், விஜயநகர ஆட்சி - நாயக்கர் நாடுகள், பதினெட்டாம் நூற்றாண்டில் உள்ள பாளையங்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் தென்மண்டலம், மேற்படி ஆட்சியில் மெட்ராஸ் ப்ரெசிடென்ஸி, சுதந்திர இந்தியாவில் 1950க்கும் முற்பட்ட சென்னை ராஜதானி, மொழிவழிப் பிரிவினைக்குப் பின்னர் உள்ள தமிழகம் - என்று பத்துப் பதினைந்து மேப்புகளைத் தமிழிலும் இங்கிலீஷிலுமாக வரையலாம் என்று நினைத்தேன். சில மேப்புக்களையும் வரைந்தேன்.
சில ·பேஸ்புக்குகளில் நான் வரைந்த சில மேப்புக்களை ப்ரோ·பைலில் போட்டிருந்தார்கள்.
கைமாறிக் கைமாறி வந்திருக்கும் போல. யார் வரைந்தது என்று போடவில்லை.
பழைய மடல்களுக்கு வருவோம்......
மூன்று மடல்கள் கிடைத்தன.
அவற்றை அடுக்கடுக்காகத் தொகுத்துப்போட்டிருக்கிறேன்.
நீளமாக இருக்கும் ஆற அமர ஆத்தி சூடி அமர்ந்த தேவனை மனதில் வழுத்திக்கொண்டு நிதானமாகப் படியுங்கள்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சங்ககாலத்தில் தமிழ் பேசப்படும் இடங்களாக இருந்த பிரதேசம் இப்போது உள்ளதைவிட பரப்பில் பெரியதாக இருந்திருக்கிறது.
'கொடுந்தமிழ்' எனப்படும் Dialect-களைப் பேசிய இடங்களையும் சேர்த்தால் இன்றைய தமிழ்நாடு முழுமையும், இன்றைய கேரளா முழுமையும், இன்றைய கர்நாடகாவின் தென்கிழக்கு ஓரங்களும், இன்றைய ஆந்திராவில் திருப்பதிவரையுள்ள பிரதேசமும் ஆக விளங்கியிருந்தது.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் ஆகிய திருப்பதி மலைக்கும் குமரிக் கடலுக்கும் இடையே உள்ள பிரதேசம் தமிழ் கூறும் நல்லுகமாக இருந்தது. அத்துடன் இலங்கைத் தீவின் வட பகுதியும் தமிழர்களின் பிரதேசமாக இருந்தது.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 80000 எண்பதினாயிரம் சதுர கீலோமீட்டர் -
பழைய கணக்கில் 50000 ஐம்பதினாயிரம் சதுர மைல் பரப்பாக இருக்கிறது.
பழந்தமிழகம் இதைப் போல இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது.
இன்றைய கேரளாவின் பரப்பளவு கிட்டத்தட்ட 40000 நாற்பதினாயிரம் சதுர கீலோமீட்டர்.
வட இலங்கை 13000 பதின்மூன்றாயிரம் சதுர கீலோமீட்டர்கள். ஆந்திராவில் உள்ள பகுதிகள் இன்னும் 15000 பதினையாயிரம் சதுர கீலோமீட்டர்களுக்குக் குறையாது. கர்நாடகாவில் உள்ள சில ஆயிரம் கீலோமீட்டர்களையும் சேர்த்துப் பாருங்கள்.
இரண்டு மடங்கை விட அதிகமாகத்தான் இருந்திருக்கிறது.
இதை இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்ப்போம்.....
·பேஸ் புக்கிலிருந்து எவனாவது கெட்டவார்த்தையில் திட்டாமலும் இருந்து, இந்தச் செம்மொழித் தமிழ் அடியாட்கள் மூடைக் கெடுக்காமலும் இருந்தால் மிக நன்றாகவே, விவரமாக விரிவாக, விலாவாரியாக எழுதலாம்தான்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழகத்தின் வட எல்லையாகத் திருப்பதி இருந்தது. அதுதான் 'நெடியோன் குன்றம்'.
தற்கால ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம், நெல்லூரின் தெற்கு ஓரம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, வேலூரின் வட ஓரம் ஆகியவை அடங்கிய பிரதேசத்தில் இரண்டு நாடுகள் இருந்தன.
ஆக வடகோடியில் இருந்தது அருவா வடதலை நாடு.
அதற்கும் கொஞ்சம் தெற்கே இருந்தது அருவா நாடு.
இந்த இரண்டு பிரதேசங்களின் பெயர்களில் 'அருவா' என்னும் பெயர் பொதுவாகக் காணப்படுகிறது.
இவை இரண்டுமே தமிழ் பேசப்பட்ட இடங்கள்தாம்.
தெலுங்குக் காரர்களுக்கு உடன் தெற்காக - அடுத்து - அவர்கள் நாட்டை ஒட்டி
இருந்தது இந்தப் பிரதேசம்தான்.
அதாவது ஆந்திரா அல்லாத - ஆந்திரம் பேசப்படாத பிரதேசம்.
அங்கு பேசப்பட்டது தெலுங்கு அல்லாத மொழி.
அருவா நாட்டில் பேசப்பட்ட மொழி.
ஆகையால் அருவா மொழி.
அதாவது தமிழ் மொழி.


இந்த 'அருவா' என்னும் பெயரே பிற்காலத்தில் 'அரவ' என்று மருவிவிட்டது.
தமிழுக்கே தெலுங்கில் 'அரவ பாஷை' என்னும் பெயர் ஏற்பட்டுவிட்டது.
மதுரையை ஆண்ட தெலுங்கராகிய திருமலை நாயக்கர்கூட தமிழை 'அரவம்' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழர்களை 'அரவ வாடு' என்று தெலுங்கில் குறிப்பிட்டார்கள்.


இந்திய சுதந்திரத்துக்கு ப்பின்னர் மாநிலச் சீரமைப்புச் செய்தார்கள்.
அதற்கு அடிப்படையாக மொழிவழி மாநிலங்களைத் தோற்றுவித்தார்கள்.


தெலுங்கு பேசும் பகுதிகளை மதராஸ் ராஜதானி - Madras Presidency மாகாணத்திலிருந்து பிரித்து 'ஆந்திரப் பிரதேஷ்' என்னும் தெலுங்கு மொழி மாநிலத்தை உருவாக்கினார்கள்.
அப்போது பெரும் போராட்டங்கள் ஏற்பட்டன.
ஆந்திரா பிரிவதையே அடிப்படையில் விரும்பாதவர்களும் இருந்தார்கள்.
சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் ஏராளமாக இருந்தனர். ஆகவே அதையும் திருப்பதியையும்
தமிழர்கள் விரும்பினர்.
ஆனால் தெலுங்கர்கள் விடவில்லை.
மதராஸை அவர்கள் கேட்டார்கள்.
திருத்தணியையாவது தமிழர்களுக்காகப் பெறுவோம் என்று தமிழரசுக் கட்சி
ம.பொ.சிவஞான கிராமணியாரின் தலைமையில் போராடியது.
அந்தப் போராட்டத்தின் போது ஆந்திரர்கள் சில முழக்கங்களைச் செய்தார்கள்.
"மதராஸ் மநதே!"
"அரவள்ள சாவடு! ஆந்திர ராஜ்ஜியமு!"
கடைசியில் சித்தூர், திருப்பதியெல்லாம் ஆந்திராவுக்குப் போய்விட்டன.
சித்தூரின் ஒரு பகுதியான திருத்தணி தமிழ்நாட்டுடன் சேர்ந்தது.
மதராஸ் நம்மளுது ஆகி சென்னையாக மாறிவிட்டது.


'தமிழ் கூறும் நல்லுலகம்' சம்பந்தமான பழம்பாடல்களும் இலக்கியக் குறிப்புகளும் இருக்கின்றன.


நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பறுத்த தண்புனல்நாடு.


நெடியோன் குன்றம் - திருவேங்கடம்
தொடியோள் பௌவம் - குமரிக் கடல்


இது சிலப்பதிகார அடிகள் என்பதைப் பலர் படித்திருப்பீர்கள்.
பனம்பாரனார் என்னும் புலவர் ஒருவர். இவர் மிகவும் பழங்காலத்தில் இருந்தவர்.


"வடவேங்கடந் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"


இவர்தான் இந்தப் புகழ்பெற்ற வரிகளைக் கூறியவர்.


இன்னொரு பாடலில் கூறப்பட்டுள்ளது........


வேங்கடங் குமரிதீம்புனல் பௌவமென்று
இன்னான்கெல்லை தமிழது வழக்கே


இன்னும் இரு அடிகள் -


"குமரிவேங்கடம் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்"


கிழக்கிலும் மேற்கிலும் கடலே எல்லையாகக் கூறப்பட்டிருக்கின்றன.....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.


இன்னும் ஏதாவது கிடைத்தால் 'ஸாம்போஙான்' போடுகிறேன்.


அன்புடன்


ஜெயபாரதி

Wednesday, March 21, 2012

Golden Era And Paradigm Shift

அன்பர்களே,


ஏற்கனவே அகத்தியத்தில் எழுதிய பழைய மடலின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பப் பாராக்களை
அம்ட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய சூழ்நிலைகளை வைத்து சிறிய 'ஸாம்போஙான்' -
தொடர்ச்சியை எழுதியிருக்கிறேன்.


>>>>>>>>>>>>>>>.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்கால், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி ஆகியவற்றில் உள்ள
காலகட்டம் தமிழர்களின் பொற்காலம் போல் தோன்றுகிறது.
புறநானூறு நூலை அய்யரவர்கள் பதிப்பித்த ஆண்டிலிருந்து அந்தக் காலகட்டத்தின் ஆரம்பத்தைக் கொள்ளலாம். 1870களிலிருந்து கொள்ளலாம்.
தமிழ் உணர்வு, சுயமரியாதை ஆகியவை அந்தக் காலகட்டத்தில் Momentum என்பதைக்
கொண்டிருந்தன. வெகு விரைவாக பல துறைகளில் அந்த மொமெண்ட்டம் அதிகரித்துக்கொண்டே
போனது.
இந்தக் காலகட்டம் தீர்க்கமான நுணுக்கமான ஆய்வுக்குரியது.


இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கில் பல்முனைகளில் ஏற்பட்டுக்
கொண்டிருந்த மாற்றங்கள், அவற்றின் காரணங்கள், அவற்றை ஏற்படுத்தியவர்கள், அவர்களின்
பின்னணிகள், அவர்களின் தொண்டுகள், அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள், தர்மங்கள், அந்த
மாற்றங்களின் தாக்கங்கள், அவற்றின் விளைவுகள், அவற்றின் பின்விளைவுகள், By-Products
போன்றவற்றை நுணுகி ஆராயவேண்டும். இவற்றிற்கு BackDrop and BackGround ஆக இருந்த
காலதேசவர்த்தமான, சமய, சமுதாய, மொழி, அரசியல் பின்னணிகளையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காலகட்டத்தையும் காலத்தின் ஓட்டத்தையும் தவறாமல் ஆராயவேண்டும்.
பாரடைம் என்றொரு சொல்லைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Paradigm என்னும் அந்தச் சொல் சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட சொல்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


<ஸாம்போஙான்>
Paradigm Shift என்னும் சொலவடையும் அடிக்கடி பேசப்பட்டது.
Alvin Toffler-ருடைய Third Wave, Future Shock, Power Shift ஆகிய நூல்களில் இது
அதிகமாகப் பேசப்படும். அதுவும் முக்கியமாக Power Shift-இல் காணலாம்.
ஒரு பெரிய பின்னடைவு என்னவென்றால் இத்தகைய நூல்கள் தமிழில் எழுதப்படவில்லை.
என்னுடைய வருங்காலவியல் நீள்தொடரில் நான் இதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.


Future Shock - அதன் பிரதிபலிப்பாக ஏற்படும் Culture Shock ஆகியவற்றுக்கு நல்ல
உதாரணத்தைச் சில நாட்களுக்கு முன்னர் யூட்டியூபில் பார்த்திருக்கலாம்.


சிங்கப்பூரில் இந்துத் தமிழர்களின் ஒரு திருமணக்காட்சி.
பரிசம் போடுகிறார்கள் போலும். அந்த நிகழ்வுக்கு மணப்பெண் சில தடிப்பசங்களுடன் ஆடிக்
கொண்டே வருகிறாள். மணமேடையை நெருங்கியதும் இருப்பதிலேயே ரொம்பவும் ரௌடிய வடிவுடன்
விளங்கியவன் அந்தப் பெண்ணின் கையைப்பிடித்து மணப்பெண்ணைச் சுழற்றி விடுகிறான். அவளும் சுழன்றுகொண்டூ மணமேடைக்குச் செல்கிறாள். இதைப் போய் 'அட்டகாசமான வருகை' என்று
சிலாகித்து வர்ணித்திருந்தார்கள்.
ஆகவேதான் அடிக்கடி சொல்கிறேன். அந்த எழுபத்தைந்து ஆண்டுகளோடு ஒரு சிறு பொற்காலம் முடிந்துவிட்டது.
1971-க்குப் பின்னர் மிகப் பெரிய தேய்மானமும் பின்னடைவும் ஏற்பட்டுவிட்டன.
அதன் உச்சகட்டம்தான் கோவையில் நடைபெற்ற 'செம்மறி மாநாடு'.


>>>>>>>>>>>>>>>>>
இப்போது தமிழியம், தமிழர்கள், தமிழ்ப்பண்பு, கலாச்சாரம், மனப்பான்மை ஆகியவற்றைப்
பார்க்கும்போது நமக்கு தற்காலத்துக்கு ஏற்றதொரு பாரடைம் மிக மிகத் தேவையாகத் தெரிகிறது.


அந்த மாதிரியான பாரடைம்களைச் சிருஷ்டிசெய்துகொள்வதற்கு மேற்குறிப்பிட்டுள்ள ஆய்வு தேவைப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக - முதலாவதாக, ஒன்று அதிகம் தேவைப்படுகிறது.
Commitment.


அன்புடன்


ஜெயபாரதி

Monday, March 19, 2012

Friday, March 16, 2012

SKY-WATCH VIYAALZAN+VELLI-17-03-2012

அன்பர்களே,

இப்போதெல்லாம் மாலையில் சூரியன் மறைந்த பின்னர் இருட்டிய சமயத்தில் மேற்கு வானின்
கீழ்ப்பகுதியில் இரண்டு பிரகாசமான கிரகங்களைக் காணலாம்.
அதில் ரொம்பவும் பிரகாசமாக இருப்பது சுக்கிரன் என்னும் வெள்ளி. அதன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு பிரகாசமான கிரகம்தான் பிரஹஸ்பதி என்னும் வியாழன்.
சுக்கிரன், விடிவெள்ளி பற்றிய விபரங்கள் ஏற்கனவே அகத்திய ஆவணத்தில் இருக்கின்றன. 'தெற்கு ஓடிய வெள்ளி' என்ற இழையும் உண்டு.
Astronomy வானநூல்படி, இன்று சூரியன் மீனத்தில் 3 டிகிரி 15 மினிட்டில் இருக்கிறது. வியாழன் மேஷம் 16 டிகிரி 11 மினிட்டிலில் இருக்கிறது. சுக்கிரன் இப்போது மேஷத்தில் 18 டிகிரி 57 மினிட்டில் இருக்கிறது. வியாழன் சூரியனிலிருந்து 43 டிகிரி 26 மினிட் தூரம் விலகியுள்ளது. சுக்கிரன்
46 டிகிரி 12 மினிட் தள்ளியிருக்கிறது. சுக்கிரன் அதிக பட்சம் நாற்பத்தெட்டு டிகிரிதான் விலகி
யிருக்கமுடியும். அதற்கு மேல் போக முடியாது. நின்ற இடத்தில் நின்று, நிதானித்துவிட்டு, சூரியனை நோக்கி நெருங்கி வரும். சூரியனுக்கு மிக அருகில் வரும்போது சூரியனின் தகத் தகாயத்தால் கண்ணுக்குத் தெரியமாட்டாது. இந்த நிலையைத்தான் அஸ்தாங்கம் என்பார்கள். தற்சமயம் இன்னொரு
கிரகமான புதன் மீனம் 11 டிகிரியில் இருக்கிறது. அதாவது சூரியனிலிருந்து ஏழேமுக்கால் டிகிரிதான்
தள்ளியுள்ளது. இது புதனுக்கு அஸ்தாங்க நிலை. 'அஸ்தமனம்' என்றும் சாதாரணமாகச் சொல்வார்கள்.

சுக்கிரன் இவ்வளவு தள்ளியிருப்பதால்தான் இவ்வளவுக்கு பிரகாசமாகத் தெரிகிறது.
வெள்ளியை 'சுக்கிரன்' என்றும் சொல்வார்கள். சுக்கிரன் பிருகு முனிவரின் மகன். ஆகவே
பார்க்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு. ஸ்ரீயாகிய லட்சுமி வெவ்வேறு கல்பங்களில் வெவ்வேறு
இடங்களில் தோன்றியவள். ஒருமுறை அவள் பிருகு முனிவரின் மகளாகப் பிறந்தாள். ஆகவே
ஸ்ரீலட்சுமிக்கு 'பார்க்கவி' என்ற பெயருண்டு.
சிவனால் விழுங்கப்பட்டு வயிற்றிலிருந்து மீண்டு வெளியில் வந்ததால் வெள்ளை நிறம் ஏற்பட்டது. ஆகவே சுக்கிரன் என்ற பெயர். வெள்ளையானவன் வெள்ளி.
சுக்கிரனே ஸ்ரீலட்சுமிக்கு உரிய கிரகம். சுக்கிரனின் அதிதேவதை ஸ்ரீலட்சுமி. சுக்கிரனால்
பிரச்னைகள் இருந்தால் ஸ்ரீலட்சுமியை வழிபடச் சொல்வார்கள்.
வெள்ளி உலோகத்துக்கு வெள்ளி என்ற பெயர் ஏற்பட்டதும் சுக்கிரனால்தான். சுக்கிரனுக்கு உரிய உலோகமும் வெள்ளிதான். வெள்ளி வெள்ளையாக இருப்பதால் அந்தப் பெயர் என்றும் சொல்வார்கள்.
வெள்ளிக்கிழமைக்கு உரிய கிரகமும் சுக்கிரன்தான். சுக்கிர ஹோரையும் ரிஷபராசியும்
துலாராசியும் சுக்கிரனுடையவை.
ஸ்ரீலட்சுமியைப் பொன்மகள் என்று குறிப்பிடுவார்கள். அவள் வெள்ளிக்கும் உரியவள்தான்.

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸ¤வர்ண ரஜத் தஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவ:

ஸ்ரீலட்சுமிக்குரிய ஸ்ரீஸ¥க்தத்தின் முதல் சுலோகம். இதல் வரும் 'ரஜத்' என்பது வெள்ளி.

கயிலை மலையை 'வெள்ளி மலை' என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வழிபாட்டில் முக்கியமானது. அதுபோலவே ஸ்ரீலலிதா
த்ரிஸதி என்னும் முன்னூறு மந்திரங்கள் கொண்ட வழிபாட்டு நூலும் முக்கியமானது. இவை இரண்டும்
நாமாவளி நூல்களில் பிரபலமானவை. ரொம்பவும் பிரபலமானது சஹஸ்ரநாமம்தான்.
இன்னொன்றும் இருக்கிறது. அதை 'கட்கமாலா' என்று அழைப்பார்கள். அதன் இன்னொரு
வடிவம் 'ஸஹஸ்ராக்ஷர வித்யா' எனப்படுவது.

இவை தவிர இன்னும் ஒரு நாமாவளி நூலும் உண்டு.
நூற்றெட்டு மந்திரங்கள் கொண்ட ஸ்ரீலலிதா அஷ்டோத்தரசத நாமாவளி. மிக அழகிய நூல்.
அர்த்த புஷ்டி என்பார்களே, அது பொருந்தியது. அந்த மந்திரங்களை சந்தத்தோடு பாடினால் மனம்
லயித்து எங்கோ சென்றுவிடும்.
அதன் முதல் மந்திரங்கள்:

ரஜதாசல ச்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோநம:
ஹிமாசல மஹாவம்ச பாவனாயை நமோநம:

இதில் வரும் ரஜத் அசலம் என்பது வெள்ளிமலை. ச்ருங்கம் என்பது கொம்பு. மலையின் உச்சிப்
பகுதியையும் குறிக்கும்.

அன்புடன்

ஜெயபாரதி

========================

Sunday, March 4, 2012

AFTER THE ICE


AFTER THE ICE - BOOK REVIEW





OTTAI KAALANAA-ORDINARY KAALANAA-KUDHIRAI KASU



ஓட்டைக் காலணாவும் சாதாக் காலணாவும் குதிரைக் காசும்