என்னுடைய மதிப்பிட முடியாத புத்தகங்கள் -#2
FOREIGN NOTICES OF SOUTH INDIA
by
PROF. K.A.NILAKANTA SASTRI
தமிழக வரலாறு, சோழர் வரலாறு, ஸ்ரீவிஜய வரலாறு, பாண்டிய வரலாறு
முதலிய தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியவர் பேராசிரியர் கே.நீலகண்ட சாஸ்திரிகள்.
அவருடைய நூல்களில் பெரும்பாலானவற்றை நான் வைத்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நூலை மட்டும் மலாயாப் பல்கலைக் கழக நூலகத்திலிருந்து பிரதி எடுத்துக்கொண்டேன்.
அவர் எழுதியவற்றில் நான் தேடிப் பிடித்து வாங்கிய நூல் ஒன்று உண்டு.
Foreign Notices Of South India.
இந்த நூல் ரொம்பவும் நூதனமானது.
கிமு மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தைப் பற்றி எழுதிய கிரேக்கத்து மெகஸ்தீனஸிலிருந்து கிபி 1451-ஆம் ஆண்டில் தமிழகம்/தென்னிந்தியாவுக்கு வந்த மா ஹ¤வான் வரை, வெளிநாட்டுப் பயணிகள் தென்னாட்டைப் பற்றி எழுதி வைத்த குறிப்புகள்; அந்தக் குறிப்புகள் பேரில் உள்ள வரலாற்று ஆராய்ச்சிகள், ஜியாக்ர·பி, கலாச்சாரம், வாணிபம், உணவுகள், பழக்கவழக்கங்கள், போர்கள் பயணங்கள்/பாதைகள் முதலியவற்றைப் பற்றியது.
இந்த நூல் 1972-இல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளிவரும்போது
சாஸ்திரியாருக்கு எண்பது வயது. நான் உடனேயே வாங்கி விட்டேன்.
இந்த நூலை நான் வாங்கிய கையோடு 1973-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னைக்குச் சென்றேன். அங்கே தியாகராயநகரிலோ மாம்பலத்திலோ அவர் வீடு. அவரை அவருடைய வீட்டில் சந்தித்தேன்.
காலை நேரம். 10-00 மணி இருக்கும்.
கே.ஏ.என். வேகமாக லிவிங் ரூமுக்கு வந்தார்.
வயது அப்போது எண்பதுக்கு மேல் இருக்கும். வெள்ளையும் சொள்ளையுமாக இருந்தார்.
என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். நான் ஒரு டாக்டர் என்றும் உடல் நலிவுற்ற தந்தையாரைப் பார்த்துக்கொள்வதற்காக சிங்கம்புணரியிலேயே தங்கிவிட்டதாகவும், அந்த சமயத்தில் வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சிகள் பல செய்ததாகவும் சொன்னேன். என்னுடைய ஆய்வு சம்பந்தமாக நான் கொண்டு சென்றவற்றையும் அவரிடம் காட்டினேன்.
தந்தையார் சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டபடியால் என்னிடம் தந்தையார் ஒப்படைத்திருந்த சொத்துக்களைச் சகோதரர்களுடன் பாகப்பிரிவினை செய்துகொண்டுவிட்டதாகவும் அது சம்பந்தமான வேலைகள் முடிந்துவிட்டதால் வீட்டைக் காலிசெய்து அண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு விரைவில் மலேசியாவுக்கு என்னுடைய மனைவி குழந்தைகளுடன் செல்லவிருப்பதாகவும்
சொன்னேன்.
அவர் அப்படியே பார்த்தார். நீண்ட நேரம் பார்த்தார். அப்புறம் என்னைப்
பார்த்தார். நீண்ட நேரம் பார்த்தார். கேட்டரேக்ட் கண்ணாடிகளின் மூலம்
கண்கள் பெரியதாகத் தெரிந்தன. ஆச்சரியப்பட்டாரா என்பதுகூட தெரியவில்லை.
எதுவுமே அதிகமாகச் சொல்லவில்லை.
நான் கொண்டு சென்ற Foregn Notices Of South India புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
அந்த நூலைப் பற்றி கொஞ்சம் சொன்னார்.
அதன் பின்னர் அந்தப் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
ஓரிடத்தில் வெறும் கையெழுத்து மட்டும்.
இன்னோர் இடத்தில் நாகரி எழுத்தில் பகவத் கீதை சுலோகம் ஒன்றை
எழுதி அதன்கீழ் "Remember Me And Fight On" என்று எழுதி, அங்கும் ஒரு கையெழுத்தை இட்டுத் தந்தார்.
அதன் பின்னர் நான் மதுரைக்கு வந்து சிங்கம்புணரிக்கு வந்து சேர்ந்தேன்.
1973-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி அப்போது ஓடிய
லக்ஸரி கப்பலாகிய எம்.வி.சிதம்பரம் கப்பலில் மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடனும் ஐந்து பெரிய இரும்பு டிரங்குப்பெட்டிகள், இரண்டு பெரிய தோல்பெட்டிகள் ஆகியவற்றுடன் மலேசியா புறப்பட்டேன். 250 புத்தகங்கள், நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் குறிப்புகள், அப்பா எழுதிய நூல், அவருடைய டயரி, அவருடைய சுய சரிதம், அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள், தாய் தந்தையரின் துணிமணிகள் நகைகள் - நினைவு நாளன்று படையல் பூஜைக்கு வேண்டுமல்லவா - முக்கிய படங்கள், கையெழுத்துப் பிரதிகள், பழங்காசுகள், கல்வெட்டு நோட்டுப்புத்தகம், பூஜைச் சாமான்கள், சில சிலைகள், தெய்வப் படங்கள், குலதெய்வத்தின் குத்துவிளக்கு, எங்களுடைய முக்கிய துணிமணிகள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஓலைச்சுவடிகள் முதலியவற்றுடன் பினாங்குக்கு மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்குள் நீலகண்ட சாஸ்திரியார் இறந்துவிட்டார்.
அந்தப் புத்தகம் மிகவும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது.
Autographed Book by a Great Historian.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$