PERSISTENCE OF MEMORY
SALVADORE DALI
நீலமணியின் நீண்ட கதை
கடாரம்
கொங்குநாட்டு நீலமணிகள்
அரிக்கமேடு
நீலமணி கண்ட கோவா பெண்மணி
இப்போதெல்லாம் சில ஆண்டுகளாகக் கடாரச் சின்னங்கள் மியூசீயத்துக்குச்செல்பவர்கள் கூட்டம் அதிகமாகிவருகிறது.
வருகிறவர்களில் பலர் இரண்டு மூன்று பஸ்களில் வருகிறார்கள். அதுவோ சிறிய இடம். ஒரே சமயத்தில் எண்பது பேர் உள்ளே நுழைந்து பார்த்து என்னத்தை அறிந்துகொள்ளப்போகிறார்கள்?
முதலில் விஷய ஞானம் உள்ளவர்கள் உடன் இருத்தல் மிகவும் அவசியம். அவர்கள் மியூஸீயத்தில் இருக்கும் அரும்பொருட்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விளக்கங்கள் கொடுக்கவேண்டும்.
அந்த மியூஸீயத்தில் இந்து சமயம், பௌத்த சமயம் ஆகியவை சம்பந்தப்பட்ட சின்னங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் பின்னணிகள் இருக்கும்.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மணிக்கற்களை அந்த வட்டாரத்தில் எடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைச் சிறிய பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் போகிற போக்கில் சற்று எட்டத்தில் இருந்து நகர்ந்தவாக்கில் பார்ப்பார்கள்; அல்லது பார்க்காமல் சென்றுவிடுவார்கள்.
அந்தக் கற்களில் பல மாதிரி உண்டு. அவற்றில் குறிப்பாகச் சொல்லப்
போனால் சில நீலமணிக் கற்கள் இருக்கின்றன. அவற்றை Corundum
கொருண்டம் என்று இங்கிலீஷில் குறிப்பிடுவார்கள்.
அந்தக் கற்களைத் தமிழில் குருந்தக் கல் என்று குறிப்பிடுகிறோம்.
அந்த வகைக் கற்கள் கொங்குநாட்டுப் பகுதியில் ஒரு மலையில் கிடைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே யவனர்கள் அந்தக் குருந்தக் கற்களை மிகுதியாக வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
12-03-2000த்தில் கடாரம் சம்பந்தமாக டாக்குமெண்டரி எடுப்பதற்காக
கோவாக்காரப் பெண்மணி ஒருவரின் தலைமையில் ஒரு குழு வந்திருந்தது.
சிங்கப்பூர் அரசுக்காக அந்த டாக்குமெண்டரி எடுக்கப்பட்டது.
என்னைச் சந்திக்குமாறு சிங்கப்பூரில் யாரோ சொல்லி அனுப்பியிருந்தார்கள்.
பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
மியூஸீயத்தில் அந்த கோவாப் பெண் நீலமணிக் கற்களையே பார்த்தவாறு நின்றிருந்தார்.
நான் அந்தக் கற்களைப் பற்றி சொல்லி கொங்குநாட்டு நீலமலையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு வந்தேன். அங்கு மட்டும்தான் அந்தக் கற்கள் விளைந்தன.
அந்தப் பெண் கவனமாகக்கேட்டுவிட்டு, "நான் இதே கற்களை
அரிக்கமேட்டில் பார்த்திருக்கிறேன்", என்றார். அங்கும் டாக்குமெண்டரி
எடுத்திருக்கிறார்கள்.
அரிக்கமேடு என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த பெரிய பட்டினம். அங்கு யவனர் குடியிருப்பு, வர்த்தகமையம் ஆகியவை இருந்தன. யவனர்கள் அரிக்கமேட்டை 'பொதுக்கே' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
கடாரத்துக்கும் அந்த நீலமணிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
அவைதாம் மற்ற சிறு சிறு மணிக் கற்களுடன் அந்தப் பாலிதீன் பைகளில் கலந்து இருந்தன.
பாருங்கள்......
ஒரே ஒரு அயிட்டம். சின்னஞ்சிறு கற்கள். ஒதுக்குப் புறமாய்க் கலந்து கிடந்தன.
ஆனால் அவற்றில் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது.
அதனால்தான் சொன்னேன்......
விஷயம் தெரிந்தவர்களை அங்குக் கூட்டிச்சென்று விளக்கம் பெறவேண்டும்.
இல்லையென்றால் நேரத்துக்கும் பெட்ரோலுக்கும் பிடித்த கேடு என்று ஆகிறது.