தோணி என்னும் சிறு கப்பல்கள்
என் தந்தையார் எஸ்.கே.எஸ் சின்னமுத்து பிள்ளையவர்கள் மேடான் நகர் மோஸ்க்கீ ஸ்த்ராட், நான்காம் நம்பருக்கு முழு முதலாளியாக இருந்ததால் கிட்டங்கி ஸிஸ்டம் அங்கு கடைபிடிக்கப் படவில்லை. அங்கு 1936க்குப் பின்னர் இருந்தவர்கள் எல்லாம் என் தந்தையாரின் உறவினர்களும் ஊர்க்காரர்களும்தான்.
தந்தையார் 1936க்கு முன்னாலேயே பினாங்கில் பிஷப் ஸ்ட் ரீட்டில்
முப்பதொன்றாம் நம்பரை வாடகைக்கு எடுத்திருந்தார். அதுவும் ஒரு மிக
நீளமான அகலமான ஷாப் ஹவுஸ்தான். மாடியும் இருந்தது.
இந்தக் கட்டடத்தில் பெரும்பகுதி கோடவுனாக இருந்தது. ஹோல்ஸேல்
ரீட்டேய்ல் விற்று வரவும் இருந்தது.
அப்பாவுக்கு நான்கைந்து வகை பிஸினஸ்கள். லேவாதேவி மார்க்காக்களே ஆறு இருந்தன.
அவைபோக ஏற்றுமதி இறக்குமதி இருந்தது. சுமாத்ராவில் ஏராளமாக
சாம்பிராணி, ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை, தாளிசபத்திரி, மிளகு, இன்னும் சில மருந்துப்பொருட்கள், ஆமை ஓடு, முதலை எண்ணெய், மான் கொம்பு, மர்க்கீஷாப் பழம் போன்றவற்றை வாங்கி நாலாம் நம்பரில் வைத்திருந்து, அவற்றைச் சிப்பம் என்னும் பேல்களில் கட்டி, அவற்றை மேடானிலிருந்து இருபத்து நான்கு மைல் தூரத்திலிருந்த பெலாவான் என்னும் துறைமுகத்தில் தொங்க்காங் என்னும் சிறு கப்பல்களில் ஏற்றி பினாங்குக்கு அனுப்புவார்கள்.
தொங்காங்க் என்பனவற்றைத் தமிழர்கள் தொங்கான் என்று
குறிப்பிடுவார்கள். ஒற்றைப் பாய்மரம் நடுவிலும் முகப்பில் இன்னொரு பாய்
பின்னால் சிறிய பாயும் இருக்கும்.
பெலாவானின் நேர் வடக்கே கடல் கடந்து நூற்றைம்பது மைல் தூரத்தில் பினாங்கு இருந்தது. அங்குள்ள ஸ்வெட்டென்ஹாம் பியர் என்னும் துறையில் தொங்கான் வந்தணையும். அங்கிருந்து நடைதூரம்தான் - பிஷப் ஸ்திரீட் முப்பத்தொண்ணாம் நம்பர்.
பினங்கில் சிப்பம்கள் பிரிக்கப்பட்டு, சரக்குகள் தேவைக்கேற்ப வேறு சிப்பங்களாகக் கட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும். அங்கு
சித்தார்கோட்டை பி அஹ்மட் அண் ஸன்ஸ் தம்பு செட்டித் தெருவில்
வைத்திருந்த கொடவுனுக்குச் சென்று விடும்.
மதராஸிலிருந்து பளையகாட் கைலிகள், மல் வேட்டி, குண்டஞ்சு நாலு முழ வேட்டி, சேலைகள் தஞ்சாவூர் அபிரஹாம் பண்டிதர் தயாரித்த
கருணானந்தர் மூலிகை மருந்துகள் போன்றவை பினாங்குக்கு அனுப்பப் படும்.
அங்கிருந்து மேடானுக்கு வந்து சேரும்.
1927-இல் மேடான் சென்றவர் 1937-இல் ஒரு மில்லியனேராக இருந்தார்.
தங்கக் காசுகள் பரிவர்த்தனை வேறு இருந்தது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$