Thursday, October 25, 2012

THE FRAGRANCE OF MADURAI


அன்பர்களே,

சிலநாட்களுக்கு முன்னர் 'உத்தம புத்திரன்' என்ற பெயரில் ஒரு படம் வந்தது.
ஏற்கனவே இதே பெயரில் இரண்டு படங்கள் வந்தன. ஒன்றில் பியூ சின்னப்பா; இன்னொன்றில் சிவாஜி.
இதை கதை உல்ட்டாப் பண்ணப்பட்டு, இம்சை மன்னன் 23-ஆம் புலிகேசியாக வந்தது.
ஆனால் அந்தப் புதுப் படம் முற்றிலும் வேறு கதையைக் கொண்டது.

இதில் ஒரு பாட்டு வருகிறது.....
"மதுரெ மல்லிஹெ மொட்டு...." என்று வரும்.

இப்போதெல்லாம் மதுரையை 'மதுரெ' என்றோ 'மதுர' என்றோதான் சொல்லவேண்டும். அதுதான் புதுப்பழக்கம். சினிமாவில் அப்படித்தானே வருகிறது?
மதுரை மல்லிகைக்கு அப்படியொரு மகத்துவம்.
மதுரையே மல்லிகை மணத்தால் நிரம்பியிருக்குமாம்.

ஆனால் பழங்காலத்தில் மல்லிகை மணம் மட்டுமல்ல, பலவித
நறுமணங்களும் கலந்து மதுரையை நிரப்புமாம்.
தூரத்தில் வரும்போதே இந்த நறுமணக் கலவையை முகர்ந்தே
மதுரையைச் சமீபித்துவிட்டதைப் பிரயாணிகள் தெரிந்து கொள்வார்களாம்.

என்னென்ன நறுமணமெல்லாம் மதுரையில் இருந்தது என்பதை
சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது. திருவிளையாடல் புராணத்திலும் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் காணலாம்.

சிலப்பதிகாரப்பாடலைப் பார்ப்போமே.......

காழகிற் சாந்தம் கமழ்பூங்குங்குமம்
நாவிக்குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச்சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ் சேறாடி ஆங்குத்
தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லை
போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத்தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்தேறு பூம்புகை அளைஇ
மதுரை தென்றல் வந்தது காணீர்
நன்சேய்த் தன்றவன் திருவலிமூதூர்

சிலம்பு - 115-133/13

அகில், குங்குமப்பூ, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி,  சந்தனம் போன்றவற்றின் சாந்துக் கலவைகளின் வாசம்;
மதுரையில் உள்ள வீடுகளில் உள்ள சமையற்கட்டுகளிலிருந்து வரும் தாளிதம் போன்ற சமையல் மணமும் அடுப்புகளிலிருந்து வரும் புகையின் மணமும்;
அங்காடிக் கடைகளில் சுடப்படும் பலகாரங்களின் மணமும் புகையின் மணமும்;
ஆண்களும் பெண்களும் நீராடிவிட்டு, தம்முடைய கூந்தலை உலர்த்திக் கொள்வதற்காக போட்டுக்கொள்ளும் அகில் புகையின் மணமும்;
மதுரையிலுள்ள தோட்டம் துரவுகளில் மலர்ந்த மல்லிகை, மாதவி, செண்பகம், கழுநீர் முதலிய மலர்களின் நறுமணமும்;
ஆகிய இவையனைத்தும் மதுரையிலிருந்து வீசும் தென்றலில் கலந்து வரும்.

இந்த நறுமணக்கலவைதான் மதுரையை அடையாளம் காட்டி விடுமாம்.

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment