திருவுக்குரிய திருநாள்
தீபாவளியின் உண்மையான பின்னணியைப் பற்றிய கட்டுரைகளில் இது இரண்டாவது.
முதன்முதலில் 1986-இல் மலேசிய தினமணிப் பத்திரிக்கையிலும் 1991-இல் மயில் இலக்கியப் பத்திரிக்கையிலும் எழுதினேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழர்களிடம் தீபாவளி பற்றி தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இவை மலேசியத் தென்னாட்டு இந்துக்களிடம் ரொம்பவும் அதிகமாகக் காணப் படுகின்றன.
நரகாசுரனை சத்தியபாமா சம்ஹரித்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை காளிகா புராணம் என்னும் உப புராணத்தில் உபகதை-துணைக்கதையாகக் காணப் படுவது.
இந்த இடத்தில் சற்று யோசிக்கவேண்டும்.
தென்னாட்டு இந்துக்களிடையே சைவம், வைஷ்ணவம் ஆகிய இரு சமயங்களினிடையேயும் பல காலமாகத் தீராப்பகை நிலவியே வந்திருக்கிறது.
கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாகத் தீபாவளி இருப்பின், இது முழுக்க முழுக்க ஒரு வைஷ்ணவ விழாவாகவே கருதப்பட்டிருக்கும். சைவர்கள் தீபாவளியை அடியோடு புறக்கணித்திருப்பார்கள். ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாட மாட்டாத சைவர்கள் தீபாவளியை மட்டும் எப்படிக் கொண்டாடுவார்கள்?
ஆகவே தீபாவளி கொண்டாட்டத்துக்கு வேறு பின்னணிகள் இருக்கின்றன.
நவராத்திரியைத் தவிர்த்து, இந்திய இந்துக்களால் அதிகம் கொண்டாடப் படும் பண்டிகைத் தீபாவளிதான்.
வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையைத் தென்னகத்தில் கொண்டாடுவதில்லை. தமிழகத்தின் பொங்கல் பண்டிகை மற்றவர்களால் சிறப்பாகக் கொண்டாடப் படுவதில்லை. கேரளத்தின் ஓணம், மற்ற இடங்களில் கிடையாது.
ஆனால் தீபாவளியை இந்திய இந்துக்கள் அனைவருமே கொண்டாடுகிறார்கள்.
ஆனால் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக் கொள்கிறார்கள்.
மஹாலட்சுமி பாற்கடலில் தோன்றியதை நினைவுறும் வண்ணம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒவ்வோர் இடத்தில் லட்சுமி அவதரிப்பாள்.
மன்வந்திரம் என்றால் என்ன?
நம்முடைய காலண்டர் முறை தனித்தன்மை படைத்தது.
365.25 நாட்கள் கொண்டது ஒரு வருடம். இப்படிப்பட்ட வருடங்கள் 17,28,000 கொண்டது கிருத யுகம். 12,96,000 கொண்டது திரேதாயுகம் .8,64,000 கொண்டது துவாபர யுகம். 4,32,000 கொண்டது கலியுகம்.
இவை அனைத்தையும் மொத்தமாகச் சதுர்யுகம் என்பார்கள்.
43,20,000 ஆண்டுகள் கொண்டது. மஹாயுகம் என்றும் சொல்வார்கள். சதுர்யுகங்கள் அடுத்தடுத்து வந்துகொண்டேயிருக்கும்.
இந்த மாதிரியான சதுர்யுகங்கள் 72 கொண்டது ஒரு மன்வந்திரம். 311 மில்லியன் 40000 வருடங்கள் கொண்டது.
இந்த மாதிரி 14 மன்வந்தரங்கள் தோன்றி மறையும் காலத்தைக் கல்பம் என்பார்கள். இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இதே கால அளவுக்கு ஒருப் பிரளயம் ஏற்படும். அது பிரம்மாவின் இரவு. இவ்வாறு நூறு ஆண்டுகள் கொண்டது பிரம்மாவின் ஆயுள்.
இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மன்வந்தரத்தை வைவஸ்வத மன்வந்தரம் என்பார்கள். இதற்கு முன்னுள்ள மன்வந்தரங்களில் மஹாலட்சுமி தாமரை, வில்வம், பூமி போன்ற இடங்களில் தோன்றினாள்.
இந்த மன்வந்தரத்தில் மஹாலட்சுமி பாற்கடலில் தோன்றினாள்.
தூர்வாசர் என்னும் கோபக்கார முனிவரின் சாபத்தினால் தேந்திரனிடமிருது லட்சுமி நீங்கினாள். அதனால் அவனுடைய செல்வமும் மற்றவர்களின் செல்வமும் அறவே மறைந்தன. ஆகவே உலகெங்கும் சிறப்புக் குன்றியது. மீண்டும் லட்சுமியைத் தோன்றச்செய்ய தேவர்கள் ஆலோசனை செய்தனர்.
பாற்கடலில்தான் ஸ்ரீதேவி தோன்றுவாள் என்பதைக் கண்டறிந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலை என்பதனை மத்தாகவும் வாசுகி என்னும் மகா நாகத்தைக் கயிறாகவும் வைத்துக் கடைந்தார்கள்.
கனத்தால் மலை கடலில் அமுங்கியது.
ஆமை வடிவெடுத்து மஹாவிஷ்ணு மலைக்கு அடியிலிருந்து தம்முடைய முதுகால் அதைத் தாங்கி நிலை நிறுத்தினார்.
பாற்கடலிலிருந்து முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவபெருமான் விழுங்கித் தொண்டையில் அடக்கி, அழகாகத் திருநீலகண்டனாகத் திகழ்ந்தார்.
அதன்பின்னர் ஜேஷ்டை என்னும் மூத்த தேவி தோன்றினாள். அவளுக்குப் பின்னால் ஸ்ரீதேவி எனப்படும் ஆதிலட்சுமி தோன்றினாள்.
அதன் பிறகு உச்சைஸ்ரவஸ் என்னும் தெய்வீகக்குதிரை, அமிர்தம் போன்றவை தன்வந்திரியுடன் தோன்றின. ஆதிலட்சுமி விஷ்ணுவை அடைந்தாள். அவள் அஷ்ட லட்சுமியாகவும் காட்சி தந்து பலவகையான செல்வங்களை உலகுக்கு வழங்கினாள்.
இதை முன்னிட்டு தீபத்தை ஏற்றிவைத்து லட்சுமியின் வருகையைக் கொண்டாடினார்கள்.
தீபாவளிக்கு முன்னால் மூன்றுநாட்களுக்குப் பாதாள லோகத்திலிருந்து பூமிக்கு அரக்கர்களும் தீயசக்திகளும் வருகை புரிவார்கள்.
மஹாபலி என்னும் அசுர குல அரசனின் தலைமையில் பூமியில் ஆதிக்கம் செலுத்த முனைவார்கள்.
அப்போது ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியான ஜேஷ்டாதேவியின் ஆதிக்கமும் தோன்றும். அவர்களை ஸ்ரீதேவியின் துணையோடு தீபங்களின் உதவியால் இருளை அகற்றி, வாணங்கள், பட்டாசுகள், வெடிகள் முதலியவற்றைக் கொளுத்தி, அந்த தீயசக்திகளை விரட்டி அடிப்பார்கள்.
அலட்சுமியாகிய மூத்த தேவியின் ஆதிக்கமும் அகன்றுவிடும்.
மஹாபலியை மீண்டும் பாதாள லோகத்துக்கு அனுப்பியபின்னர் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடுவார்கள்.
ஐப்பசி மாதத்துத் தேய்பிறைச் சதுத்தசியன்று சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னர் பிறைச்சந்திரன் தோன்றும். அப்போது பூமியிலுள்ள நீர்நிலைகள் எல்லாவற்றிலும் கங்காதேவி ஆவாஹணம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மகாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். அந்த சமயத்தில் சந்திரனைப் பார்ப்பார்கள். இதைச் சந்திர தரிசனம் என்பார்கள். அதைத் தொடர்ந்து நல்லெண்ணெயைத் தேய்த்துக்கொண்டு கங்கை ஆவாஹணம் ஆகியுள்ள நீரில் குளிப்பார்கள். இதனை கங்கா ஸ்நானம் என்பார்கள்.
ஒரிஸ்ஸா போன்ற இடங்களில் உள்ளவர்கள், வீட்டிற்கு வெளியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மாட்டுச் சாணக் குவியலை வணங்குவார்கள். வயலுக்கு எருவாகப் பயன்படுத்தப்படும் மாட்டுச்சாண எருக்குவியல், சகதி, போன்றவற்றில் ஸ்ரீதேவியாகிய லட்சுமி வாசம் செய்வதாக அக்கால மக்கள்
நம்பினார்கள். இந்தக் கருத்து வேத காலத்திலேயே இருந்தது. லட்சுமியின் மானஸ புத்திரராகிய கர்த்தமப் பிரஜாபதி சகதியில்தான் லட்சுமியின் நிழலில் தோன்றியதாகக் காணப்படுகிறது.
"கர்தமேனப் ப்ரஜாபூரா மயி ஸம்பவ கர்தம:" என்ற ஸ்ரீஸ¥க்த வாசகத்தால் இதனை அறியலாம்.
ஸ்ரீ ஸ¥க்தம் என்பது வேத மந்திர நூல். மிகவும் பழைமையானது.
லட்சுமி உறையும் இடங்களில் தாமரையும் ஒன்று, லட்சுமிக்கேகூட 'கமலா', 'பத்மா', என்றெல்லாம் தாமரையைக் குறிக்கக்கூடிய பெயர்கள் உண்டு. தாமரையும் சகதியில் தோன்றுவதுதானே.
வண்டல், சேறு, சகதி, எருக்குவியல் போன்றவை விவசாயத்தின் ஆதாரமான விஷயங்கள்.
"சோழநாடு சோறுடைத்து", என்று ஔவையார் பாடியதற்கு அடிப்படையாக அமைந்ததே காவிரியின் நீர்வளமும் அது கொண்டுவந்து சேர்க்கும் சகதியும்தானே?
ஸ்ரீஸ¥க்தம் என்பது ஸ்ரீதேவிக்குரிய மிகச் சிறந்த மந்திரநூல். அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் காணப்படுவது. பதினைந்து ஸ்லோகங்களைக் கொண்டது. ஆற்றல் மிகப் படைத்தது. அதன் பெயரைச் சொல்லியே பெரும்பணம் சம்பாதிப்பவர்கள் மலேசியாவில்கூட உள்ளனர். அவ்வளவு ஆற்றல் படைத்தது.
தீபாவளியை விவசாயிகளைவிட வணிகர்களே மிகவும் அதிகம் செலவழித்து மிக மிக விமரிசையாகக் கொண்டாடினர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால்தான் தீபாவளிப் பண்டிகை இவ்வளவு செல்வாக்கை அடைந்தது.
மூத்ததேவியின் தாக்கத்தைப் போக்கி, ஸ்ரீதேவியின் செல்வாக்கைப் பெறுவதற்காக திருவின் திருநாளாகிய தீபாவளியின்போது நல்லதைச் சிந்தித்து, நல்லதைச் செய்து, திருவாகிய ஸ்ரீதேவியை வணங்கி வரவேற்போம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment