தமிழ்கூறும் நல்லுலகம் பற்றி அகத்தியர் குழுவில் எழுதிய மடல்
தமிழ்கூறும் நல்லுலகம் போன்ற தலைப்புக்களில் பண்டைக்கால தமிழ்நாட்டின் பரப்பளவு, எல்லைகள் முதலியவற்றை அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன்.
இவற்றையெல்லாம் வைத்து சங்ககாலம், இடைக்காலம், பல்லவ-பாண்டியர் காலம், சோழர் கால, பாண்டியர் காலம், துருக்கர் ஆட்சிக்காலம், விஜயநகர ஆட்சி - மண்டலங்கள், விஜயநகர ஆட்சி - நாயக்கர் நாடுகள், பதினெட்டாம் நூற்றாண்டில் உள்ள பாளையங்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் தென்மண்டலம், மேற்படி ஆட்சியில் மெட்ராஸ் ப்ரெசிடென்ஸி, சுதந்திர இந்தியாவில் 1950க்கும் முற்பட்ட சென்னை ராஜதானி, மொழிவழிப் பிரிவினைக்குப் பின்னர் உள்ள தமிழகம் - என்று பத்துப் பதினைந்து மேப்புகளைத் தமிழிலும் இங்கிலீஷிலுமாக வரையலாம் என்று நினைத்தேன். சில மேப்புக்களையும் வரைந்தேன்.
சில ·பேஸ்புக்குகளில் நான் வரைந்த சில மேப்புக்களை ப்ரோ·பைலில் போட்டிருந்தார்கள்.
கைமாறிக் கைமாறி வந்திருக்கும் போல. யார் வரைந்தது என்று போடவில்லை.
பழைய மடல்களுக்கு வருவோம்......
மூன்று மடல்கள் கிடைத்தன.
அவற்றை அடுக்கடுக்காகத் தொகுத்துப்போட்டிருக்கிறேன்.
நீளமாக இருக்கும் ஆற அமர ஆத்தி சூடி அமர்ந்த தேவனை மனதில் வழுத்திக்கொண்டு நிதானமாகப் படியுங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சங்ககாலத்தில் தமிழ் பேசப்படும் இடங்களாக இருந்த பிரதேசம் இப்போது உள்ளதைவிட பரப்பில் பெரியதாக இருந்திருக்கிறது.
'கொடுந்தமிழ்' எனப்படும் Dialect-களைப் பேசிய இடங்களையும் சேர்த்தால் இன்றைய தமிழ்நாடு முழுமையும், இன்றைய கேரளா முழுமையும், இன்றைய கர்நாடகாவின் தென்கிழக்கு ஓரங்களும், இன்றைய ஆந்திராவில் திருப்பதிவரையுள்ள பிரதேசமும் ஆக விளங்கியிருந்தது.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் ஆகிய திருப்பதி மலைக்கும் குமரிக் கடலுக்கும் இடையே உள்ள பிரதேசம் தமிழ் கூறும் நல்லுகமாக இருந்தது. அத்துடன் இலங்கைத் தீவின் வட பகுதியும் தமிழர்களின் பிரதேசமாக இருந்தது.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 80000 எண்பதினாயிரம் சதுர கீலோமீட்டர் -
பழைய கணக்கில் 50000 ஐம்பதினாயிரம் சதுர மைல் பரப்பாக இருக்கிறது.
பழந்தமிழகம் இதைப் போல இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது.
இன்றைய கேரளாவின் பரப்பளவு கிட்டத்தட்ட 40000 நாற்பதினாயிரம் சதுர கீலோமீட்டர்.
வட இலங்கை 13000 பதின்மூன்றாயிரம் சதுர கீலோமீட்டர்கள். ஆந்திராவில் உள்ள பகுதிகள் இன்னும் 15000 பதினையாயிரம் சதுர கீலோமீட்டர்களுக்குக் குறையாது. கர்நாடகாவில் உள்ள சில ஆயிரம் கீலோமீட்டர்களையும் சேர்த்துப் பாருங்கள்.
இரண்டு மடங்கை விட அதிகமாகத்தான் இருந்திருக்கிறது.
இதை இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்ப்போம்.....
·பேஸ் புக்கிலிருந்து எவனாவது கெட்டவார்த்தையில் திட்டாமலும் இருந்து, இந்தச் செம்மொழித் தமிழ் அடியாட்கள் மூடைக் கெடுக்காமலும் இருந்தால் மிக நன்றாகவே, விவரமாக விரிவாக, விலாவாரியாக எழுதலாம்தான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழகத்தின் வட எல்லையாகத் திருப்பதி இருந்தது. அதுதான் 'நெடியோன் குன்றம்'.
தற்கால ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம், நெல்லூரின் தெற்கு ஓரம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, வேலூரின் வட ஓரம் ஆகியவை அடங்கிய பிரதேசத்தில் இரண்டு நாடுகள் இருந்தன.
ஆக வடகோடியில் இருந்தது அருவா வடதலை நாடு.
அதற்கும் கொஞ்சம் தெற்கே இருந்தது அருவா நாடு.
இந்த இரண்டு பிரதேசங்களின் பெயர்களில் 'அருவா' என்னும் பெயர் பொதுவாகக் காணப்படுகிறது.
இவை இரண்டுமே தமிழ் பேசப்பட்ட இடங்கள்தாம்.
தெலுங்குக் காரர்களுக்கு உடன் தெற்காக - அடுத்து - அவர்கள் நாட்டை ஒட்டி
இருந்தது இந்தப் பிரதேசம்தான்.
அதாவது ஆந்திரா அல்லாத - ஆந்திரம் பேசப்படாத பிரதேசம்.
அங்கு பேசப்பட்டது தெலுங்கு அல்லாத மொழி.
அருவா நாட்டில் பேசப்பட்ட மொழி.
ஆகையால் அருவா மொழி.
அதாவது தமிழ் மொழி.
இந்த 'அருவா' என்னும் பெயரே பிற்காலத்தில் 'அரவ' என்று மருவிவிட்டது.
தமிழுக்கே தெலுங்கில் 'அரவ பாஷை' என்னும் பெயர் ஏற்பட்டுவிட்டது.
மதுரையை ஆண்ட தெலுங்கராகிய திருமலை நாயக்கர்கூட தமிழை 'அரவம்' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழர்களை 'அரவ வாடு' என்று தெலுங்கில் குறிப்பிட்டார்கள்.
இந்திய சுதந்திரத்துக்கு ப்பின்னர் மாநிலச் சீரமைப்புச் செய்தார்கள்.
அதற்கு அடிப்படையாக மொழிவழி மாநிலங்களைத் தோற்றுவித்தார்கள்.
தெலுங்கு பேசும் பகுதிகளை மதராஸ் ராஜதானி - Madras Presidency மாகாணத்திலிருந்து பிரித்து 'ஆந்திரப் பிரதேஷ்' என்னும் தெலுங்கு மொழி மாநிலத்தை உருவாக்கினார்கள்.
அப்போது பெரும் போராட்டங்கள் ஏற்பட்டன.
ஆந்திரா பிரிவதையே அடிப்படையில் விரும்பாதவர்களும் இருந்தார்கள்.
சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் ஏராளமாக இருந்தனர். ஆகவே அதையும் திருப்பதியையும்
தமிழர்கள் விரும்பினர்.
ஆனால் தெலுங்கர்கள் விடவில்லை.
மதராஸை அவர்கள் கேட்டார்கள்.
திருத்தணியையாவது தமிழர்களுக்காகப் பெறுவோம் என்று தமிழரசுக் கட்சி
ம.பொ.சிவஞான கிராமணியாரின் தலைமையில் போராடியது.
அந்தப் போராட்டத்தின் போது ஆந்திரர்கள் சில முழக்கங்களைச் செய்தார்கள்.
"மதராஸ் மநதே!"
"அரவள்ள சாவடு! ஆந்திர ராஜ்ஜியமு!"
கடைசியில் சித்தூர், திருப்பதியெல்லாம் ஆந்திராவுக்குப் போய்விட்டன.
சித்தூரின் ஒரு பகுதியான திருத்தணி தமிழ்நாட்டுடன் சேர்ந்தது.
மதராஸ் நம்மளுது ஆகி சென்னையாக மாறிவிட்டது.
'தமிழ் கூறும் நல்லுலகம்' சம்பந்தமான பழம்பாடல்களும் இலக்கியக் குறிப்புகளும் இருக்கின்றன.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பறுத்த தண்புனல்நாடு.
நெடியோன் குன்றம் - திருவேங்கடம்
தொடியோள் பௌவம் - குமரிக் கடல்
இது சிலப்பதிகார அடிகள் என்பதைப் பலர் படித்திருப்பீர்கள்.
பனம்பாரனார் என்னும் புலவர் ஒருவர். இவர் மிகவும் பழங்காலத்தில் இருந்தவர்.
"வடவேங்கடந் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
இவர்தான் இந்தப் புகழ்பெற்ற வரிகளைக் கூறியவர்.
இன்னொரு பாடலில் கூறப்பட்டுள்ளது........
வேங்கடங் குமரிதீம்புனல் பௌவமென்று
இன்னான்கெல்லை தமிழது வழக்கே
இன்னும் இரு அடிகள் -
"குமரிவேங்கடம் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்"
கிழக்கிலும் மேற்கிலும் கடலே எல்லையாகக் கூறப்பட்டிருக்கின்றன.....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
இன்னும் ஏதாவது கிடைத்தால் 'ஸாம்போஙான்' போடுகிறேன்.
அன்புடன்
ஜெயபாரதி
தமிழின் எல்லையைத் தெளிவாக கணக்கெடுத்து ஆராய்ச்சி முறையில் எழுதியுள்ளீர்கள். இதுபற்றி ஆஸ்திரேலியாவிருந்து வந்திருந்த திரு. கந்தராஸ் என்பவர் இதனை விளக்கித் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் உரை நிகழ்த்தினார். உங்கள் பதிவுகள் நல்ல கருத்துக்களைக் கொண்டதாக உள்ளது. வாழ்த்துக்கள். இன்னும் இதுபோன்ற விபரக்குறிப்புகளை எழுத வேண்டுகின்றேன்.
ReplyDeleteஅன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.